கோவை : கோவையில் தனியார் மருத்துவமனையில் ஊசி செலுத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொற்றால் 9 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், 2 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த போலி நர்ஸை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த தம்பதி, கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் வசித்து வந்தனர். இவர்களது 9 வயது மகன் தன்வீனுக்கு கடந்த 2024-ம் ஆண்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நடராஜ் சிறுவனைப் பரிசோதித்துள்ளார். பின்னர், அங்கு பணிபுரிந்து வந்த சாந்தி (62) என்ற நர்ஸ் சிறுவனுக்கு ஊசி செலுத்தியுள்ளார்.
மறுநாள் வீட்டில் இருந்தபோது, ஊசி செலுத்திய இடத்தில் சிறுவனுக்கு கடுமையான வீக்கம் ஏற்பட்டதுடன், வலியும் அதிகரித்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர், சிறுவனை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து, தன்வீனை பெற்றோர் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஊசி செலுத்திய இடத்தில் ஏற்பட்ட தொற்று உடல் முழுவதும் பரவியிருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தன்வீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊசி செலுத்திய இடத்தில் ஏற்பட்ட தொற்றே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கேரள அரசு மற்றும் மருத்துவ வாரியம் மேற்கொண்ட ஆய்விலும் மருத்துவ அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக அறிக்கை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில், சாந்தி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நர்ஸாகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை அறிந்த சாந்தி தலைமறைவானார். அவரைப் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாந்தியை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.






