Breaking News: கோவையில் சுகாதார நிலையத்திற்குச் சென்ற பிஞ்சுக் குழந்தை பரிதாப பலி!

கோவை:கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படும் 10 மாத பெண் குழந்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படும் 10 மாத பெண் குழந்தை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி, சரண்யா தம்பதியினர், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 10 மாத பெண் குழந்தை கனிஷ்கா ஸ்ரீக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கடந்த 7-ம் தேதி வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்திய செவிலியர், காய்ச்சல் ஏற்பட்டால் கொடுப்பதற்காக மாத்திரை ஒன்றையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், பெற்றோர் செவிலியர் வழங்கிய மாத்திரையை குழந்தைக்குக் கொடுத்துள்ளனர். இதையடுத்து குழந்தை சோர்வாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீண்டும் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

அங்கு குழந்தையைப் பரிசோதித்த செவிலியர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த நான்கு நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை, இன்று காலை உயிரிழந்தது.

குழந்தையின் உயிரிழப்பு குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாகவும், தடுப்பூசி செலுத்திய பிறகுதான் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், குழந்தைக்கு மாரடைப்பு, மூளைக் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறிய அவர்கள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணம் குறித்தும், அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டபோது மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்க மறுப்பதாகக் குற்றம்சாட்டினர்.

குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எனவே, குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், தடுப்பூசி அல்லது வழங்கப்பட்ட மாத்திரையால் குழந்தையின் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழப்புக்கான காரணம் குறித்து உரிய மருத்துவ விசாரணை மூலம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...