அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் போட்டி?- சிபிஐ மாநில செயலாளர் பதில்….

கோவை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், கோவையில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisement

தமிழக அரசு கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது என்றும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பில்லூர், சிறுவாணி அணைகளைத் தூர்வார வேண்டும் என்றும், இயற்கை எதிர்காலத்திற்கான நன்கொடை என்பதால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் போடப்பட்டுள்ள சாலைகள் தொழில் நகரத்திற்கேற்ற தரத்தில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ஏழு எம்.டி.சி. ஆலைகள் ஏழு ஆண்டுகளாக இயங்காமல் இருப்பதாகவும், அவற்றின் தொழிலாளர்களுக்கு நிலுவைச் சம்பளம் மற்றும் போனஸ் உள்ளிட்ட பணப் பலன்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். கோவை–மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதைப் போல வேறு எங்கும் இல்லை என்று குறிப்பிட்ட வீரபாண்டியன், அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்வது கூடாது என்றும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்தார். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மகாராஜா கல்லூரி நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என்பதால், அதனை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பண்டிகைக் காலங்களில் பேருந்துக் கட்டணங்கள் தொடர்பாக அரசு கவனம் செலுத்தவும் கேட்டுக்கொண்டார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நெருக்கடியான காலங்களில் பொருட்களின் விலை உயரக்கூடாது என வலியுறுத்தியதைப் போல, தற்போதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வரும் 10ஆம் தேதி இடதுசாரிகள் சார்பில் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளதாகவும், மார்ச் 3ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) (சிபிஎம்எல்) ஆகிய கட்சிகள் இணைந்து திருச்சியில் உழைக்கும் மக்களைத் திரட்டி மாபெரும் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மாநில அரசும் மத்திய அரசும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement

அம்பாசமுத்திரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு மிகுந்த தொகுதி என்று குறிப்பிட்ட அவர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்போம் என்றார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் குறித்து கம்யூனிஸ்டுகள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்பவர்கள், மார்ச் 3ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பேரணியில் அதைப் பார்க்கலாம் என்றும் கூறினார். அனைத்து தளங்களிலும் தங்களுக்கு வாக்குகள் இருப்பதாகவும், தேர்தல் செலவுகளை அரசே ஏற்கும் நிலை ஏற்பட்டால் சூழல் மாறும் என்றும் தெரிவித்தார்.

ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகும் என்றும், தனித்துப் போட்டியிடுவது வேறு என்றும் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதுகுறித்த தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்போம் என்றார்.

தமிழக வெற்றிக் கழக (டிவிகே) அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு ஆதரவான அரசாக மாறிவிடக் கூடாது என்றும், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியான இணக்கம் இருப்பது சரியானதுதான் என்றாலும், மத்திய அரசின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என்றார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) விவகாரத்தில் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது தவறு என்றும், கண்முன்னே நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

நவீன வளர்ச்சிக்கு கம்யூனிஸ்டுகள் எதிரானவர்கள் அல்ல என்றும், அந்த வளர்ச்சி தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். சபாநாயகர் இதனை ஒருநாள் புரிந்துகொள்வார் என்றும் கூறினார்.

அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சட்டப்படி யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் செயல்பாடுகளை மாநில அரசு அப்படியே பின்பற்றக் கூடாது என்றும் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது தங்களது கோரிக்கை என்றார்.

தங்களது விமர்சனங்கள் மக்களின் நலன் சார்ந்தவை என்றும், அதற்காக ஆட்சிக்கு அளித்த ஆதரவை ஆறு மாதங்களுக்குள் திரும்பப் பெறுவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். வகுப்புவாத அரசியல் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இருந்தால் ஆதரவைத் திரும்பப் பெறலாம் என்றும், தற்போது அத்தகைய சூழல் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

அனைத்துக் கட்சிகள் மீதும் தங்களுக்கு ஜனநாயகப் பார்வை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியாக எதிர்க்கும் பாஜக பிரதமரைக்கூட ஜனநாயகக் கண்ணோட்டத்துடன்தான் அணுகுவதாகக் கூறினார். டிவிகே அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ஊர்க்காவல் படை மட்டும் போதாது; ஒட்டுமொத்த ஊருமே காவல் படையாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்களின் கரங்கள் சிறுமிகளையும் பெண்களையும் பாதுகாக்கும் கரங்களாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர் ஒருவர் பிரதமராகலாம் என்று குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியது, “இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்பதுபோல் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், ஊழியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் என அனைவரும் சமமானவர்கள் என்றும், மதத்தின் அடிப்படையில் சிறைக் கைதிகளை அணுகக் கூடாது என்றும் கூறினார். அனைவரும் இந்தியா என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழர் பண்பாடு நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், மத்திய அரசு செல்வந்தர்களுக்கான அரசாகச் செயல்படும் நிலையில், தமிழக அரசு எளிய மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். தற்போதைய அரசை கடந்த 30 ஆண்டுகால ஆட்சிகளுடன் ஒப்பிடக் கூடாது என்றும் தெரிவித்தார். அரசை விமர்சிப்பவர்கள் யார் என்ற பாரபட்சமின்றி, எளிய மக்களின் நலனிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தாங்கள் வீழ்ந்தால் அயல்நாட்டவர்கள் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், அண்டை வீட்டாரே கொண்டாடுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் வன்மத்துடன் பேசுவதில்லை என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளைப் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் விமர்சனங்களைக் கட்சித் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்று வாக்களிக்காதவர்கள் நாளை தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறிய அவர், மக்களை இன்னும் நெருங்கிச் செல்லாதது தங்களது தவறுதான் என்றும் ஒப்புக்கொண்டார். வாக்குச் சீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது- அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு…

கோவை: தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்பு தருவோம் என சங்கத் தலைவர் ஜெயம்பாண்டியன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க முடிவு...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...