கோவை: தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்பு தருவோம் என சங்கத் தலைவர் ஜெயம்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க முடிவு செய்துள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயம்பாண்டியன் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதலாக வசூலிக்கும் பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுமக்களுக்கு கட்டணச் சுமை இல்லாத தீபாவளியாக அமைய அனைத்துப் பேருந்து உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அபராதம் செலுத்தினாலும் பேருந்துகள் உடனடியாக விடுவிக்கப்படாது என்றும், பொங்கல் பண்டிகை வரை விடுவிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் கடந்த 2023ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டவை என்றும், இதுவே உண்மையான கட்டணப் பட்டியல் என்றும் அவர் விளக்கினார். மற்ற நாள்களில் பயணிகளின் வசதிக்காகக் குறைந்த கட்டணத்திலும் பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறினார்.
ஆம்னி பேருந்துகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒவ்வொரு பயணியின் உடைமைகளையும் முழுமையாகச் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்றார்.
இருப்பினும், போதைப் பொருள் கடத்தலுக்கு ஓட்டுநர் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். பேருந்துகளில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது என்றும், பயணிகளின் உடைமைகளில் பட்டாசுகள் இருந்தால் அவை இறக்கி வைக்கப்படும் என்றும் கூறினார்.
ஆம்னி பேருந்துகள் மணிக்கு 90 கி.மீ. வேகத்திற்கு மேல் இயக்கப்படுவதில்லை என்றும், பேருந்துகள் மெதுவாகச் சென்று திடீரென வேகமெடுக்கும்போது அதிக வேகத்தில் செல்வதைப் போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும் அவர் விளக்கினார்.
முக்கிய வழித்தடங்களுக்கான ஆம்னி பேருந்துக் கட்டணங்கள்

அறிவிக்கப்பட்ட கட்டணப் பட்டியலின்படி, சென்னை–மதுரை வழித்தடத்தில் ரூ.1,690 முதல் ரூ.2,560 வரையிலும், சென்னை–திருநெல்வேலி வழித்தடத்தில் ரூ.1,960 முதல் ரூ.3,270 வரையிலும், சென்னை–நாகர்கோவில் வழித்தடத்தில் ரூ.2,220 முதல் ரூ.3,710 வரையிலும் கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை–கோவை வழித்தடத்தில் ஏசி வசதியில்லாத இருக்கைக்கு ரூ.1,730, படுக்கை வசதிக்கு ரூ.2,090, ஏசி இருக்கைக்கு ரூ.1,990, ஏசி படுக்கை வசதிக்கு ரூ.2,460 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வால்வோ இருக்கைக்கு ரூ.2,200, படுக்கை வசதிக்கு ரூ.2,880 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை–திருநெல்வேலி, கோவை–திருச்செந்தூர், கோவை–ராமேஸ்வரம் வழித்தடங்களில் ஏசி வசதியில்லாத இருக்கைக்கு ரூ.1,410, படுக்கை வசதிக்கு ரூ.1,680, ஏசி இருக்கைக்கு ரூ.1,600, ஏசி படுக்கை வசதிக்கு ரூ.1,940 எனக் கட்டணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வால்வோ இருக்கைக்கு ரூ.1,750, படுக்கை வசதிக்கு ரூ.2,130 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவை–மதுரை வழித்தடத்தில் ரூ.1,030 முதல் ரூ.1,460 வரையிலும், கோவை–பெங்களூரு வழித்தடத்தில் ரூ.1,100 முதல் ரூ.1,710 வரையிலும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பேருந்தின் வகை மற்றும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






