கோவை: ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வீரத்தமிழச்சி வித்யா ராம்ராஜின் வாழ்க்கை பின்னணி குறித்தும், அவரது தந்தை நெகிழ்ந்து பேசியது பற்றியும் இந்தத் தொகுப்பில் காணலாம்.
பதக்க வேட்டை
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி – நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 46 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா இதுவரையில் 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் 8வது இடத்தில் உள்ளது.
தங்கம்
இவ்வளவு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூம் ஒருவர். மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் வித்யா ராம்ராஜ், பூவம்மா மச்சேத்திரா, கிரண், பிராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் 300 மீட்டரை கிரண், மச்சேத்திரா, பிராச்சி ஆகியோர் ஓடி கடந்த நிலையில், பதக்கத்தை உறுதி செய்யும், சவாலான கடைசி 100 மீட்டரை தமிழச்சி வித்யா ராம்ராஜ் ஓடினார். முதலில் பஹ்ரைன் வீராங்கனை முன்னிலை பெற்றிருந்த நிலையில், வித்யா தனது அசாத்திய திறமையால், அவரை முந்திச் சென்று நூலிழையில் தங்கத்தை தட்டிச் சென்றார்.
தேசிய சாதனை
இந்திய வீராங்கனைகள் மொத்தம் 3:29.59 நிமிடங்களில் முதலிடத்தை பிடித்தனர். அவர்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் வீராங்கனைகள் 3:30.21 நிமிடங்களில் வெள்ளியையும், சீன வீராங்கனைகள் 3:31.02 நிமிடங்களில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இந்தத் தொடரில் வித்யா ராமராஜ் ஜெயிக்கும் 3வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பாக, இவர் 400 மீட்ட தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதில் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், 42 ஆண்டு காலமாக யாராலும் முறியடிக்க முடியாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் முறியடித்தார்.

அதேபோல, 4×400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்தாண்டின் ஆசிய விளையாட்டுத் தொடரில் மட்டும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
முதல்முறையல்ல…
இந்தாண்டைப் போலவே கடந்த 2023ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். அதில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து, 1984ம் ஆண்டு பி.டி.உஷா செய்த தேசிய சாதனையை சமன் செய்தார். அதுமட்டுமில்லாமல், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
ஊக்கத்தொகை
பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ் மற்றும் அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய், வாழ்த்து தெரிவித்ததுடன், ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில்; ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷா, 1984ம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும்.
அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
பின்னணி
கோவையைச் சேர்ந்த லாரி டிரைவராவன ராம்ராஜ் என்பவரின் மகள் தான் வித்யா. வித்யாவுக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான நித்யா, வித்யாவின் இரட்டை சகோதரி. வித்யாவைப் போல நித்யாவும் ஒரு தடகள வீராங்கனை தான். இருவரும் ஈரோட்டில் உள்ள மகளிர் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். ஆரம்பத்தில் ஹாக்கி வீரர்களாக திகழ்ந்த இவர்கள், பிறகு தடகள வீராங்கனைகளாக உருவெடுத்தனர்.

மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வித்யாவுக்கு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வந்த வித்யா, பின்னர், 4×400 ஓட்டப்பந்தயத்திலும், 4×400 தடை ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்க தயாரானார். 2023ல் முதல்முறையாக 4×400 போட்டிகளில் பங்கேற்ற அவர், இந்தாண்டும் அதே போட்டிகளிலும் இந்தியா சார்பில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார்.
தந்தை நெகிழ்ச்சி
மகளின் வெற்றி குறித்து அவரது தந்தை ராம்ராஜ் கூறியதாவது; சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது மற்றும் 3வது குழந்தைகள் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் 5ம் வகுப்பு வரை தனியார் பள்ளியிலும், வசதி இல்லாததால் 6ம் வகுப்பில் இருந்து அரசு பள்ளியில் பயின்றனர். இருவரும் 7ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி பிடி ஆசிரியை தான், இருவரையும் தடகளத்தில் சேர்க்க அறிவுறுத்தினார். அங்கு துவங்கிய பயணம் இன்று தங்கம் வாங்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
பிறகு ஈரோட்டில் விடுதியில் தங்கி, அங்குள்ள விளையாட்டு பள்ளியில் பயிற்சி பெற்றனர். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.இதனால், இருவருக்கும் மத்திய அரசு வேலை கிடைத்தது. வித்யா ரயில்வேவிலும், நித்யா வருமான வரித்துறையிலும் பணியாற்றுகின்றனர். பிடி உஷாவின் நீண்ட கால சாதனையை என் மகள் முறியடித்துள்ளார். இது எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது.
பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் நித்யா இந்தப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இது எனக்கு பெரிய வருத்தம். இருவரும் எப்போதும் சேர்ந்து தான் பயிற்சி எடுப்பார்கள். இந்த வெற்றி ஒரு ஊக்கப்பரிசு தான். எங்களுடைய தடை தாண்டும் ஓட்டம் தடையின்றி தொடரும், இவ்வாறு கூறினார்.




