கோவை: இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது…
Show Jumping League எனப்படும் குதிரையேற்ற போட்டி வெளிநாடுகளில் பிரபலமான போட்டியாகும். தற்போது இந்தியாவில் முதல் முறையாக இந்த குதிரையேற்ற போட்டி கோவையில் நடைபெறுகிறது.
Advertisement

கோவை மோளப்பாளையம் பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த போட்டி நடைபெறுகிறது. இதன் துவக்க விழா இன்று அதே பகுதியில் நடைபெற்றது.
இதனை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், திமுக தொழில்நுட்ப அணி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து போட்டியின் துவக்க நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

இந்தப் போட்டியில்,
சென்னை புல்ஸ்(தமிழ்நாடு)
பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா) பெங்களூரு நைட்ஸ்(கர்நாடக)
கோல்கொண்டா சார்ஜெர்ஸ் (தெலுங்கானா) குவாண்டம் ரெய்ன்ஸ்(கோவா)
எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்காளம்)
ஆகிய ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.
Advertisement

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆ.ராசா இந்த போட்டியானது கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளதாகவும் இதனை நடத்துவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா, இந்த நிகழ்ச்சியான மக்களை பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாமல் ஒரு மணி நேரம் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அமர வைத்தது போல் இருந்ததாக தெரிவித்தார். இந்த போட்டி இப்பகுதியில் தீவிரமடைந்து பொருளாதார உதவியுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வாக அமையும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போட்டிகளுக்காக அரசின் சார்பில் ஏதேனும் உதவிகள் கிட்டினால் முதல்வரிடம் பேசி பெற்று தருவதற்கு முயற்சிப்போம் என கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும் இதில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இந்த நிகழ்வில் போட்டியின் முன்னோட்டமாக குதிரையேற்றம் சிறிது நேரம் நடைபெற்றது. அதனை மக்களும் சிறப்பு விருந்தினர்களும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.