கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் வாலிபால் மைதானத்தின் ஒரு பகுதியில் பாக்ஸிங் பயிற்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கபடி ஸ்டேடியம் உணவு விற்பனை மற்றும் விநியோகத்துக்கான ஃபுட் கோர்ட்டாக மாற்றப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வரும் மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போதிய இடவசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம், பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறும் முக்கிய மையமாக உள்ளது. இங்கு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சங்கங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் தினமும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வாலிபால் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மைதானத்தின் ஒரு பகுதியில் தற்போது பாக்ஸிங் பயிற்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வாலிபால் பயிற்சிக்கான இடவசதி குறைந்துள்ளதாக வீரர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே குறிப்பிட்ட நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில், இடநெருக்கடி காரணமாகத் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, கபடி வீரர்கள் பயிற்சி பெற்று வந்த ஸ்டேடியம் தற்போது உணவு விற்பனை மற்றும் விநியோகத்துக்கான ஃபுட் கோர்ட்டாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கபடி வீரர்கள் தங்களது வழக்கமான பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட மைதானங்களில் இதுபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது இளம் வீரர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இடநெருக்கடியால் மாணவ-மாணவிகள் முறையான பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் காத்திருப்பதற்கான போதிய வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் பயிற்சி பெற்று வரும் இளம் வீரர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் அத்தியாவசியமானவை.
எனவே, சம்பந்தப்பட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வாலிபால் மற்றும் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான பயிற்சி இடங்களைப் பாதுகாத்து, வீரர்கள் தடையின்றிப் பயிற்சி பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






