கோவை: எதிர்வர இருக்கும் மகாளய அமாவசை தினத்தில் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர் சந்ததியினர் கொடுக்கும் உபசாரங்களை ஏற்று, குடும்பத்தினரை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம் மற்றும் ஆரோக்கியம் சேரும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானவை. ஆனால், அதை விடவும் மகாளய அமாவாசை ரொம்பவும் சிறப்பு வாய்ந்தவை.
மகாளய பட்சம்
மகாளய என்றால் ஒன்றாக வருதால் என்று பொருள்படும். அதாவது,மறைந்த நம் முன்னோர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து வரும் காலம் தான் மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. பட்சம் என்றால் 15 நாட்கள் என்று அர்த்தம். நம் முன்னோர்கள் நம்முடன் தங்கக்கூடிய நாட்களை மகாளய பட்சம் என்று அழைக்கிறோம்.
புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் துவங்கி அமாவாசை வரை இந்த மகாளய பட்சம் நீடிக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தான் மகாளய அமாவாசை.இந்த அமாவாசையில் தாய் மற்றும் தந்தை வழியைச் சேர்ந்த அனைத்து முன்னோர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் உள்பட நாம் தொடர்புடைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே, இந்த மகாளய அமாவாசை தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நாட்களில் நீர்நிலைகளில் திரளும் மக்கள், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர். நீர்நிலைகளில் எள் மற்றும் தண்ணீரை இறைத்தும், அரிசி மாவில் பிண்டம் பிடித்து,அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சூரிய வழிபாடும்…
இந்தாண்டு மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தின் 4வது சனிக்கிழமையில் (அக்டோபர் 10) வருகிறது. இது டபுள் மடங்கு சுப பலன்களை அளிக்கும். அதேபோல, மகாளய அமாவாசை, அஸ்தம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியான சூரிய பகவான் தான், தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகமாகும். அஸ்தம் நட்சத்திரம் வரும் தினத்தில் சூரிய வழிபாடு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.
மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவதுடன், சூரிய பகவானையும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை.
முக்கிய 5 விஷயங்கள்

இந்த சிறப்புமிக்க மகாளய அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்களை தற்போது காணலாம்.
- மகாளய அமாவாசை தினத்தில் அதிகாலை நேரமாக எழுந்து புனித நீராட வேண்டும். அதன்பிறகு, தண்ணீரையும், எள்ளையும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும்.
- பகலில் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை சமைக்க வேண்டும். பின்னர், அதனை வாழை இலை போட்டு படையலிட வேண்டும்
- வீட்டில் சமைத்த உணவுகள் அனைத்திலும் சிறிதளவு எடுத்து தட்டில் வைத்து காகத்திற்கு படையலிட வேண்டும். அதன்பிறகே வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
- இந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும். அதேபோல, வஸ்திர தானம், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவது சிறப்பானதாகும்.
- மகாளய அமாவாசை தினத்தில் அன்றைய மாலை வீட்டிலோ அல்லது கோவிலிலோ, தங்களின் வேண்டுதலை முன்வைத்து மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும்.
எந்த நேரம்?

மகாளய அமாவாசை திதி அக்டோபர் 9ம் தேதி இரவு 9.53 மணிக்கு துவங்குகிறது. அக்டோபர் 10ம் தேதி இரவு 9.34 மணிக்கு திதி முடிவடைகிறது.





