கோவையில் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா… திராவிடர் கழகம் ஏற்பாடு!

கோவை: கோவையில் பெரியார் அறிவுலக நூலகம் அமைத்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிடர் கழகம் சார்பில் நாளை நவம்பர் 4-ஆம் தேதி மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது. முன்னதாக, நீலாம்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழாவுடன் இணைந்து, பெரியார் அறிவுலகம் அமைத்ததற்கான நன்றி பாராட்டு விழா கோவை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ஏழு தளங்களுடன் பெரியார் அறிவுலக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் நிறைவடைந்து முதலமைச்சர் விஜயால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நூலகத்தைக் கோவைக்குக் கொண்டுவந்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகம் பாராட்டு விழாவை நடத்துகிறது.

Advertisement

விழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் வரவேற்புரையாற்றுகிறார். துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்று நன்றி பாராட்டுரை வழங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்ற உள்ளார்.

திமுக கோவை மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் திராவிடர் கழக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

Advertisement

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார். கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகர் நன்றியுரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை 10.30 மணிக்கு கோவை விமான நிலையம் வர உள்ளார். அங்கு செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நீலாம்பூர் செல்லும் அவர், காலை 11 மணிக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அலுவலகம் 50 சென்ட் நிலப்பரப்பில் மூன்று தளங்களுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவை மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மேற்கொண்டு வருகிறார்.

மதியம் ஓய்வுக்குப் பின்னர், மாலை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நிகழ்ச்சி நிறைவடைந்ததும், இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் 2 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை… !

கோவையில் இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனையில் ரூ.40 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. ஜி பே மூலம் ரூ.6 லட்சம் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...