கோவை: கோவை நீலாம்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட திமுக அலுவலகத்துக்கு, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நவம்பர் 4-ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
நீலாம்பூரில் 50 சென்ட் நிலப்பரப்பில் மூன்று தளங்களுடன் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக கோவை மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மேற்கொண்டு வருகிறார்.
புதிய கட்டடத்தில் திருமண மண்டபம், உணவு அரங்கம், ஒருங்கிணைந்த மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவை அமைய உள்ளன. மேலும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான விசாலமான வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது.
இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






