கோவை: தசைநார் சிதைவு சிகிச்சை பெறுவதற்கு அரசாங்கம் போதிய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
தசைநார் சிதைவு நோய் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. பல குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சிகிச்சை அளிப்பதற்கு குறைவான மருத்துவமனைகளே உள்ளன.
அதே சமயம் இந்த நோயை குணப்படுத்த அளிக்கப்படும் மருந்துகள் ஊசிகள் அதிக விலைமதிப்புடையது. சில ஊசிகள் கோடி ரூபாய்க்கு உள்ளதால் பலரும் சிகிச்சை பெற முடியாமல் உள்ளனர். அதனால் அரசை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் முதுகு தண்டுவட நார் சிதைவு குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த கருத்தரங்கில் தசைநார் சிதைவு பற்றியும் அதன் படிநிலைகள் பற்றியும் தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பது குறித்தும் விவரித்தனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகம் ஆகியவற்றையும் கேட்டறிந்து தீர்வு கூறினர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இதற்கான மருந்துகள் மற்றும் ஊசிகளின் விலை அதிகம் என்பதால் அரசு இதில் தனி கவனம் செலுத்தி அந்த மருந்துகள் எளிதிலும் விலை குறைவாகவும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த குறைபாடானது குறிப்பிட்ட படிநிலையை தாண்டி விட்டால் உயிரை காப்பாற்றுவது மிகவும் கடினம் எனவும் தெரிவித்த அவர்கள் அரசாங்கம் போதிய மருத்துவ காப்பீட்டு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.