கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மழைநீரை முறையாகச் சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் இன்று, 05.10.2026 முதல் ஒருமாத காலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி. விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர அனைத்து பயன்பாட்டுக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக ஏற்படுத்தி, மேற்கூரைகளில் சேகரமாகும் மழைநீரை வீணாக்காமல் நிலத்தடியில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்
மழைநீரை சேகரிக்கும் வகையில், தேவைப்படும் இடங்களில், மாநகராட்சி மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும், சமூக பொறுப்பு நிதியிலிருந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதேபோல்இந்த ஒருமாத காலம் Catch the Rain Campaign” என்ற தலைப்பில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மழைநீர் சேமிப்பது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்கனவே உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள், அவற்றை முறையாக பராமரித்து, மழைநீர் தடையின்றி நிலத்தடிக்குச் செல்லும் வகையில் மழைநீர் குழாய்கள், வடிகட்டிகள், உறிஞ்சுக்குழிகள் மற்றும் சேகரிப்பு அமைப்புகள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மழைநீர் சேகரிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி தங்களது கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி, ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிக்கும் வகையில், நீர்வளப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது






