கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பருத்தி விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.
பருத்தி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. உள்நாட்டு ஜவுளித் துறையின் குறிப்பிட்ட தரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தத் தேவையில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே இறக்குமதி செய்யப்படுகிறது.
சமீபத்திய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வேளாண்மைத் துறை அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் உலகளாவிய பருத்தி சாகுபடி பரப்பு சுமார் 30.83 மில்லியன் ஹெக்டேராகவும், உற்பத்தி சுமார் 72.81 மில்லியன் டன்னாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஹெக்டேருக்கு 2362 கிலோ என்ற சாதனை அளவிலான உலகளாவிய விளைச்சல் முக்கிய காரணமாகும்.
சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உலகளாவிய பருத்தி உற்பத்தியில் சுமார் 74 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.
பருத்தி சாகுபடி பரப்பளவில் இந்தியா உலக அளவில் முதலிடத்திலும், உற்பத்தி மற்றும் நுகர்வில் இரண்டாம் இடத்திலும் உள்ளதுஇந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீட்டின்படி (2025-26), சுமார் 114.82 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது; இதன் மூலம் சுமார் 49.455 லட்சம் டன் உற்பத்தியும், ஹெக்டேருக்கு 431 கிலோ உற்பத்தித் திறனும் எட்டப்பட்டது.
மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருத்தி பெருமளவில் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டில் சாகுபடி பரப்பு 1.02 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட்டது. இதில் 3.80 லட்சம் டன் உற்பத்தியும், ஹெக்டேருக்கு 350 கிலோ உற்பத்தித் திறனும் பதிவாகின. திருவாரூர், விருதுநகர் மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகியவை தமிழ்நாட்டில் பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களாகும்.
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய பருத்தி ரகங்கள் Bt கலப்பினங்கள் வரலட்சுமி மற்றும் சுவின் ஆகியவை ஆகும். இச்சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நிலவிய பருத்தி விலைகளை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளின்படி, அறுவடை காலத்தில் தரமான பருத்தியின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களின் தகவல்படி, எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் தென்மேற்கு பருவமழையின் செயல்பாடு மற்றும் பிற பருத்தி உற்பத்தி மாநிலங்களிலிருந்து வரும் வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே, விவசாயிகள் அதற்கேற்ப தங்கள் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சந்தைப்படுத்தல் தொடர்பான விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தை நுண்ணறிவுப் பிரிவு
வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் 641 003.
தொலைபேசி: 0422-2431405
மின்னஞ்சல்: tndemic@gmail.com





