கோவை: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ், தகுதியான இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்புடன் மாதம் ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 9 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.9,000 உதவித்தொகையும், பயிற்சியில் சேரும்போது ஒருமுறை ரூ.6,000 கூடுதல் நிதியுதவியும் வழங்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும் சான்றிதழ் வழங்கப்படும்.
முழுநேரக் கல்வியில் பயின்று கொண்டிருப்பவர்கள், குறிப்பிட்ட தொழில்முறைப் பட்டங்கள் பெற்றவர்கள், ஏற்கெனவே அரசு திறன் பயிற்சி அல்லது தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றவர்கள் உள்ளிட்டோருக்கு இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை. மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதி நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் சேர விரும்பும் தகுதியான இளைஞர்கள் https://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நிறுவனங்கள் இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு thiranagamcoimbatore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற 9597981816 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேலும், THIRANAGAM COIMBATORE என்ற டெலிகிராம் சேனல் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






