கோவை: கோவை பேரூரில் மக்கள் தொடர்பு முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கோவை மாவட்டம், பேரூர் வட்டம் தத்தியாலையம் பகுதியில் உள்ள லோட்டன் மஹாலில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 192 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் வழங்கினார்.
தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாகப் பெற்று, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.
இதில், வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல், கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 192 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 3 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொண்டு டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு அரங்குகளை பார்வையிட்டார்.


