கோவை:2029-இல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் மற்றும் ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச சுற்றுலா மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், உலக அளவில் சுற்றுலாவை மேம்படுத்தும் பழமையான அமைப்பான ஸ்கால் இன்டர்நேஷனல் மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், சுற்றுலாத் துறையை பிற துறைகளைக் காட்டிலும் அதிவேக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லப் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தை மேம்படுத்த 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீகச் சுற்றுலா, இயற்கைச் சுற்றுலா, சூழியல் சுற்றுலா மற்றும் வேளாண்மைச் சுற்றுலா எனப் பல பிரிவுகளின் கீழ் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
கங்கை மற்றும் தாமிரபரணி ஆறுகளை இணைக்கும் முதற்கட்டப் பணிகளுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தனியார் பங்களிப்புடன் நடத்தப்படும் நிகழ்வு அல்ல, அரசு சார்ந்த திட்டமாகும். அதேபோல ஆன்மீகத் தலங்களை இணைக்கும் வகையில் நாகூர், வேளாங்கண்ணி, திருக்கடையூர் ஆகிய இடங்களை ஒருங்கிணைக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
சுற்றுலாத்துறை என்பது வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை எனப் பல துறைகளுடன் இணைந்து இயங்குவதால், அத்துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் (NOC) பெறுவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன.
இப் பிரச்னையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். உயர்மட்ட அளவில் கமிட்டி அமைத்து உடனுக்குடன் அனுமதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசிடமும் சில திட்டங்களுக்கு நிதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அது அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், தென்னிந்தியாவிற்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நோக்கில் அவர் பேசியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ஆனால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவரான ராகுல் காந்தி அவர்கள் 2029-இல் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதைத் தமிழக வெற்றிக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்.
விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்பது வெறும் ஊகம், அதற்குப் பதிலளிக்க முடியாது என்றார்.
ஊழலற்ற சுபிட்சமான ஆட்சியை வழங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி 1967-க்குப் பிறகு, அதாவது 59 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்தி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.





