கோவை: கோவை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றைத் தூர்வாரி சுத்தம் செய்ய ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளுக்காக மொத்தம் 120.44 கிலோமீட்டர் நீளத்திற்குப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 58.46 கிலோமீட்டர் நீளத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து சாலை சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய மண்டலத்தில் 62-வது வார்டுக்கு உட்பட்ட கொங்குநாடு ராஜவாய்க்கால் கால்வாயைத் தூர்வார ரூ.25 லட்சமும், 3.195 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்ப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 2.695 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயைச் சீரமைக்க ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வார்டு எண்கள் 65, 67, 68 மற்றும் 69 உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர, சிங்காநல்லூர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளிலும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மண்டலங்களிலும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






