கோவை: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து2025-26-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி “உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து2025-26-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி “உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா குத்துவிளக்கேற்றி, துவக்கிவைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களில் இதுவரை உயர்கல்வியில் சேராத அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் “உயர்வுக்கு படி” சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நேரடி சேர்க்கைக்காக முன்னணி கல்வி நிறுவனங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ITI மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து அரங்குகள் அமைக்கப்பட்டும், முன்னனி வங்கிகளில் இருந்து கல்வி கடன் வசதிகளும், உயர்கல்விக்கு தேவைப்படும் அரசு சான்றிதழ்கள் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/ தேர்ச்சி பெறாத மாணவர்கள் 112 நபர்கள் கலந்து கொண்டதில் 74 மாணவர்கள் நேரடி சேர்க்கையிலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/ தேர்ச்சி பெறாத மாணவர்கள் 90 நபர்கள் கலந்து கொண்டதில் 68 மாணவர்கள் நேரடி சேர்க்கையிலும் என மொத்தம் கலந்து கொண்ட 202 மாணவர்களில் 142 மாணவர்கள் நேரடி சேர்க்கையில் பதிவு செய்துள்ளனர்.




