கோவை: திமுகவை நாம் குறைத்து மதிப்பிட கூடாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசுகையில், அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 210 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும் இது வரலாறு என கூறினார்.
திமுகவை நாம் குறைத்து மதிப்பிட கூடாது எனவும் கோட்டையில் ஓட்டை போட முடியாது என சொல்வார்கள் ஆனால் சம்மட்டி எடுத்து வைத்து தயாராகத்தான் இருக்கிறார்கள் என்றார். ஏதாவது ஒரு பொய்யை சொல்லி மாற்றுவார்கள் என்றும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் பூத் வாரியாக சென்று நாம் பணியாற்ற வேண்டும் என கட்சியினரிடம் தெரிவித்தார்.
ஏதாவது கொலுசோ ஆயிரம் ரூபாயோ தேர்தல் நேரத்தில் கொடுத்து ஏமாற்றுவார்கள் என்றார். பூத்திற்கு 50 ஓட்டு மாற்றினீர்கள் என்றால் தொகுதிக்கு 35 ஆயிரம் ஓட்டு வரும் என தெரிவித்தார். புதுசு புதுசாக ஏதேதோ கட்சிகள் வருகிறார்கள் என கூறிய அவர் கட்சிகாரருக்கு பிரச்சனை என்றால் குடும்ப உறுப்பினர் போல் அதிமுக வினர் வருவார்கள் என்றார்.
இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் இங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் ஒரு மாயை என தவெக வை பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார். திமுக வை குறைத்து மதிப்பிட கூடாது யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என தெரிவித்த அவர் இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் இதில் வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும் என கூறினார்.
பூத் வாரியாக கோவில் ஜமாத் கமிட்டி குடியிருப்போர் சங்கங்கள் ஆகியோரை சந்திக்க வேண்டும் பூத் லெவலில் இறங்கி செய்ய வேண்டும் திமுக வேலை செய்யாதது போல் இருப்பார்கள் ஆனால் இறங்கி செய்வார்கள் என கூறினார்.
17ம் தேதி தலைவர் பிறந்தநாள் பிப் 24ம் தேதி அம்மா பிறந்தநாள் வரும் முன்பெல்லாம் போஸ்டர்கள் அதிகமாக அடிப்பார்கள் அண்மை காலமாக அது குறைந்துள்ளது என்றார். அம்மா பிறந்தநாள் வரும் பொழுது தேர்தல் அறிவிப்பு வந்து விடும் அதனால் தலைவர் பிறந்தநாள் விழாவின் போதே அம்மா பிறந்தநாள் மற்றும் எடப்பாடியார் பிறந்தநாள் என முப்பெரும் பிறந்தநாள் விழாவாக கொண்டாடலாம் என கூறினார்.
தெருமுனை பிரசார கூட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது என்றும் தொகுதிக்கு குறைந்தது 70 கூட்டங்கள் வரை நடத்த அறிவிப்பு வர இருக்கிறது பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
நூறு நாள் வேலை வாய்ப்பு அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பதெல்லாம் விளக்கமாக சொல்ல வேண்டும், எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. அத்தனை திட்டங்களையும் நாம் தான் செய்துள்ளோம் திமுக எந்த திட்டத்தையும் செய்யவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் போதைப் பழக்கம் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளதுடன் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பதினெட்டாம் தேதி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோவை வருகிறது என கூறினார்.

