கோவை: MSME சங்கமம் தொழில்துறை நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பான ‘லகு உத்யோக் பாரதி’ சார்பில் நடைபெறும் ‘MSME சங்கமம் Connect’ எனும் தொழில்துறை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோஇந்தியா அரங்கில் இன்று நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாநில பொது செயலாளர் கல்யாணசுந்தரம், நாட்டின் பொருளாதாரத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அந்த வகையில் MSME தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஓசூரில் இம்மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் MSME சங்கமம் கனெக்ட் எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.
இதில் 600க்கும் மேற்பட்ட அரங்குகளில் தென்னிந்தியாவை சேர்ந்த உற்பத்தி துறையினரும், அரசு நிறுவனங்களும் அரங்குகள் அமைத்து தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளதாக கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இந்நிகழ்வினை மத்திய அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைக்கவுள்ளனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைப்பின் நிர்வாகிகள் பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் Gem Portal செயல்பாடுகள் குறித்தும், அதில் பதிவு செயல்முறைகள் குறித்தும் விரிவாக தொழில் துறையினருக்கு விளக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ராணுவ துறையினருக்கான இயந்திர உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், குறிப்பாக கோவையைச் சேர்ந்த நிறுவனத்தினர் பங்கேற்று பயனடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





