கோவை: கீழே கிடந்த மணி பர்ஸை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு உரிமையாளர் 2 கிராம் தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டினார்.
கோவை வெள்ளானப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுபிக்ஷா, அங்குள்ள பெரியநாயகி அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி காளப்பட்டி சாலையில் சென்றபோது, கீழே கிடந்த மணி பர்ஸ் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.
அதனைத் திறந்து பார்த்தபோது, அதில் ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு மற்றும் ரூ.10,800 ரொக்கப்பணம் இருந்துள்ளது.
இதையடுத்து, மணி பர்ஸை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் தனது தந்தை விஸ்வநாதனிடம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஸ்வநாதன், தனது வாட்ஸ்அப் குழுக்களில் மணி பர்ஸ் கிடைத்தது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்தத் தகவல் அடுத்தடுத்து பல்வேறு குழுக்களுக்கும் பகிரப்பட்ட நிலையில், மணி பர்ஸைத் தவறவிட்ட அதன் உரிமையாளர் மோகன்ராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாணவியின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட மோகன்ராஜ், மணி பர்ஸை பாதுகாப்பாக வைத்திருந்து திரும்ப ஒப்படைக்க உதவிய மாணவியின் நேர்மையைப் பாராட்ட விரும்பியுள்ளார்.
அதன்படி மாணவியின் வீட்டிற்கே நேரில் சென்ற அவர், 2 கிராம் தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கி தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
கீழே கிடைத்த பணத்தையும் பொருட்களையும் தனதாக்கிக் கொள்ளாமல், உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட 11ஆம் வகுப்பு மாணவியின் நேர்மைக்கு கிடைத்த இந்தப் பரிசு, அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.


