கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
பாவங்களை போக்கும் புரட்டாசி
பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களை பெறுவதற்குரிய மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். குறிப்பாக, பெருமாள் வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான ஆன்மீக மாதங்களில் புரட்டாசி மாதம் முதன்மையானது. இந்த 2026ம் ஆண்டில் புரட்டாசி மாதம் செப்டம்பர் 18ம் தேதி முதல் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 16ம் தேதி வரும் சனிக்கிழமையுடன் இந்த மாதம் முடிவடைகிறது. புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை நாளை (செப்டம்பர் 26) வருகிறது.

பெருமாளுக்கு உகந்த புனித மாதமான புரட்டாசியில் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களின் பக்தர்கள் குவிவார்கள். குறிப்பாக, திருமலை திருப்பதி ஏழுமலையானை வேண்டி, மாலை அணிந்து, திருப்பதிக்கு பாதயாத்திரையாக் சென்று வழிபாடு நடத்துவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.
விரதம்
புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளியல் போட்டு, வீட்டை சுத்தம் செய்விட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி பெருமாளை வழிபடுவார்கள் பெருமாளுக்கு உகந்த துளசி மற்றும் மலர்களை தூவி அர்ச்சனை செய்து, விஷ்ணு நாமங்களைக் கூறி வழிபாடு நடத்த வேண்டும்.
இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானதாகும். மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், சனிக்கிழமைகளில் மட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரத காலகட்டத்தின் போது, அசைவ உணவுகளைத் தவிர்த்து சிலர் முழு நாள் விரதமும், ஒரு சிலரோ ஒருவேளை உணவும், இன்னும் சிலரோ எளிமையான சைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் குடும்ப வழக்கத்திற்கு ஏற்றாற் போல விரத முறையைத் தேர்வு செய்து கொள்வது மிகவும் சிறந்தது.

இந்த மாதத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்த்து எளிமையான உணவுகளை சமைப்பதும் பெரும்பாலான குடும்பங்களின் பாரம்பரிய வழக்கமாகும். விரதம் என்பது உணவை மட்டும் தவிர்ப்பது அல்ல. மனதில் உள்ள எண்ணங்களிலும் செயல்களிலும் கட்டுப்பாட்டை கொண்டு வருவதே ஆகும்.
சனிக்கிழமை
இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாளில் சிலர் திருப்பக்கு சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, காணிக்கை செலுத்துவது வழக்கம். அதேபோல, இந்த மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவாலயங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், சனி தோஷம் விலகும். சூரிய பகவானின் இச்சா சக்தியான உஷா தேவியின் புத்திரனாக தோன்றியவர் சனீஸ்வரன். இதனால், புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
மேலும், சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்களில் காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நாட்களில் பெருமாளை வணங்கினால் அனைத்துவிதமான கஷ்டங்களும் நீங்கி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கையாகும்.
புரட்டாசி பவுர்ணமி
நாளை (செப்டம்பர் 26) இந்த பவுர்ணமி புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமை வருகிறது. கிரக சேர்க்கையில் வந்து புதனும், சுக்ரனும் ஒன்றாக இருப்பார்கள். அது லட்சுமி நாராயண யோகம் என்று சொல்லுவோம். மீன ராசியில் சந்திரனும், சனியும் சேர்ந்து இருப்பார்கள். கடக ராசியில் குருவும், செவ்வாயும் சேர்ந்து இருப்பார்கள். எனவே, குருமங்கள யோகம், லட்சுமி நாராயண யோகம், மீனத்தில் வந்து சந்திரனும், சனியும் சேர்க்கை. சந்திரனில் இருந்து குரு 5, குருவில் இருந்து சந்திரன் 9. பாக்கியத்தில் இருக்கக்கூடிய சூப்பரான நாள்.

அதாவது சனிக்கிழமையில் இந்த பவுர்ணமி திதி வரும் போது, அம்மன் பாராயணம் செய்து, நைவைத்தியம் செய்து வழிபாடு நடத்த வேண்டும். புரட்டாசி மாதத்தில் சந்திரன், குருவின் பார்வை பலமாக இருக்கும். செவ்வாயின் பார்வையும் இருக்கும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் மிகவும் நன்று. பெருமாள் வழிபாடு நல்ல பலனை தரும். அல்லது வேறு எந்தக் கோவிலிலாவது தரிசனம் செய்ய வேண்டும். இந்த நாளில் நெய் தானம் செய்தால் நல்ல பலன் அளிக்கும்.
வழக்கமாக பெருமாள் கோவில்களில் சனிக்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும். துளசி மாலை வாங்கிச் சென்று கூட தரிசிக்கலாம். சிவன் கோவிலுக்கு செல்பவர்கள் நல்லெண்ணெயும், பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் நெய்யும் வாங்கி படைப்பது குடும்பத்திற்கும் நல்ல காரியங்களை சேர்ப்பதோடு, நினைத்தது நடக்கும்.
வீட்டு வழிபாடு
பெண்கள் வீடுகளில் பெருமாளுக்கு விளக்கேற்றலாம். அந்த விளக்கில் நெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து தீபம் போட்டால் விஷேம் அளிக்கும். பவுர்ணமியில் வந்து வழக்கமாக தீபம் ஏற்றி வழிபடுவோம். அதில், நெய்யும், நல்லெண்ணெயும் சேர்க்க வேண்டும். முழு பச்சைப் பயிறில் வறுத்து, வெல்லம் போட்டு பாயாசம் செய்து, நைவைத்தியமாக படைக்கலாம். கொப்பரை தேங்காயை சின்ன சின்னதாக கட் செய்து, முந்திரை, திராட்சை, ஏலக்காய், எல்லாம் பாயாசத்தில் போடலாம்.
பெருமாள் கோவில் தீர்த்தம்
பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, தூய்மையான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு, பச்சை கற்பூரம், கொஞ்சம் ஏலக்காய், ஒரே ஒரு கிராம்பு மற்றும் துளசியோடு சேர்த்து பெருமாள் கோவில் தீர்த்தம் தயார் செய்யலாம். சில பேர் ஜாதிக்காய் பொடியையும் போடுவார்கள். இது பெருமாளுக்கு உகந்த தீர்த்தமாகும்.

இந்தப் புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால், பெருமாளை வேண்டிக் கொண்டு, தயிர் சாதம் தயார் செய்து அன்னதானம் வழங்க வேண்டும். அப்படி செய்தால், தீமை அகளும் என்பது ஐதீகம்.
பவுர்ணமி திதி எப்போது?
செப்டம்பர் 25ஆன இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.06 மணி முதல் நாளை (செப்டம்பர் 26) சனிக்கிழமை இரவு 10.18 வரை புரட்டாசி பவுர்ணமி திதி நிகழவிருக்கிறது. இந்த நாளில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபடலாம். குடும்ப நலனுக்காகவும், மன அமைதிக்காகவும், ஆன்மீக ரீதியாக இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதபடுகிறது.




