கோவை: தமிழ்நாடு அரசின் விலையில்லா லேப்டாப் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி கோவை சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படிப்பை படிக்கும் எல்.எல்.பி இறுதியாண்டு மாணவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகள் எல்.எல்.பி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி எல்.எல்.பி இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரை இரண்டாவது முறையாக சந்தித்து மனு அளித்துள்ள அவர்கள
ஏற்கனவே இளநிலை கல்வியை, முடித்துவிட்டு வரும் நாங்கள் சட்டக் கல்லூரியில் மூன்றாண்டுகள் படிக்கும் எல்.எல்.பி படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் இதுவும் இளநிலை கல்வியில்தான் சேர்கிறது என்றனர்.
இந்த ஆண்டு விலையில்லா மடிக்கணினி ஐந்து ஆண்டுகள் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கும், தமிழக அரசின் மடிக்கணினியை வழங்க வேண்டும் அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினர்

