கோவை: கோவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மனித மிருக மோதல் குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மனித மிருக மோதல் குறித்த தேசிய கருத்தரங்கம் கோவை தடாகம் சாலையில் உள்ள மத்திய வன அலுவலர் பயிற்சி மையகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தான் சிங் மற்றும் துறை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
Centre of excellence on Human wildlife conflict எனும் தலைப்பில் நடைபெறும் இந்த தேசிய கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் மனித மிருக மோதல் சம்பவங்கள் குறித்த தகவல்கள், அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும், மனித மிருக மோதல் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதில் அமல்படுத்த வேண்டிய நவீன தொழில்நுட்ப முறைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் கீர்த்திவர்தான் சிங், மனித மிருக மோதல் என்பது இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிலும் பிரச்சனையாக உள்ளதாகவும், சர்வதேச அளவில் இதற்கான தீர்வுகளை கூறும் வகையில் இந்தியா சர்வதேச கருத்தரங்குகளை நடத்தி முன்னோடியாக திகழ வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், மனித மிருக மோதல் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தேவைகள் குறித்து விளக்கினார்.
முன்னதாக இந்நிகழ்வில் மனித மிருக மோதல் குறித்த தகவல் கையேடு, இணையதளம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கையேட்டினை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.





