கோவை: ஐபோன் 18 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விலையையும், ஒரு காரின் விலையையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இன்றைய காலத்தில் செல்போன் ஆடம்பரம் என்பது மாறி அத்தியாவசியம் என்றே ஆகிவிட்டது. ஒரு வீட்டில் 4 பேர் இருந்தால், அவர்கள் அனைவரின் கைகளிலும் இந்த செல்போன் என்பது கட்டாயம் இருக்கும் என்பதாகிவிட்டது. அப்படி தேவையுள்ள இந்தப் போன்களில் ஆன்ட்ராய்டு செல்போன்கள் பயனர்களிடையே எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஆனால், இதற்கு அப்படியே நேர்மாறாக இருப்பது தான் ஐபோன்கள். பயன்படுத்துவதில் சற்று கடினமாக இருந்தாலும், இதன் முக்கிய அம்சங்கள் பயனாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
செப்டம்பரும்… அப்டேட்டும்…
முதல்முறையாக ஐபோன் பயன்படுத்தத் துவங்கியவர்களை, அதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அதன் ஃபர்ஃபாமன்ஸ் ஆகியோவை, பயனாளர்களை அடிமையாக்கி விடும். தரவுகள் பாதுகாப்பில் கில்லாடியாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கேமரா, பிராஸசர், சவுண்டு குவாலிட்டி, தனித்துவமான அம்சங்களால் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள ஐபோன்களில், ஆண்டுதோறும் புது புது மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு செப்டம்பர் மாதம் தான் தனது புது மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும்.
அந்த வகையில், ஐபோன் 1 சீரிஸில் துவங்கி தற்போது ஐபோன் 18 சீரிஸ் வரை வந்து விட்டது. கடந்தாண்டு 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஐபோன் 18 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் புதிய 2என்எம்(nm) A20 ப்ரோ சிப் உடன் வெளியிட்டுள்ளது. ஐபோன் 18 ப்ரோ முறையே 36 மணிநேரமும், ப்ரோ மேக்ஸ் 45 மணிநேர பேட்டரி ஆயுளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 48 MP மெயின், டெலிபோட்டோ மற்றும் அல்ட்ராவைடு லென்ஸ்கள் மற்றும் 18 MP முன் கேமரா இடம்பெற்றுள்ளன. இதன் வன்னிலா மாடல் 2027ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் …
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய செல்போனான ஐபோன் டியோ, A20 ப்ரோ சிப் மற்றும் C2 செல்லுலார் மோடம் மூலம் இயக்கப்படுகிறது. இதில் இரட்டை செல் பேட்டரி கட்டமைப்பு மற்றும் 48 மெகாபிக்சல் ஃபியூஷன் மெயின் மற்றும் அல்ட்ரா-வைட் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் 18 ப்ரோ தொடர் நிறங்கள் மற்றும் சேமிப்பு: ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பர்கண்டி (Burgundy), கிளேசியர் (Glacier), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. இதன் ஸ்டோரேஜ் 256GB முதல் 2TB வரை வழங்கப்பட்டுள்ளது.
வியக்க வைக்கும் விலை
ஐபோன் 18 ப்ரோ விலை இந்தியாவில் ரூ.1,64,900 முதல் தொடங்குகிறது. ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,79,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல்களுக்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 12) முதல் துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 18ம் தேதி முதல் தொடங்குகிறது.
iPhone Duo
256GB – ரூ.2,99,900
512GB – ரூ.3,24,900
ITB – ரூ.3,74,900
2TB – ரூ.4,49,900
iPhone 18 PRO MAX
256GB – ரூ.1,79,900
512GB – ரூ.2,04,900
ITB – ரூ.2,54,900
2TB – ரூ.3,29,900
iPhone 18 PRO
256GB – ரூ.1,64,900
512GB – ரூ.1,89,900
ITB – ரூ.2,39,900
2TB – ரூ.3,14,900
iPhone AIR
256GB – ரூ.1,49,900
512GB – ரூ.1,74,900
ITB – ரூ.2,24,900
பழைய மாடல்…
ஆப்பிள் நிறுவனம் புதிய மாடலை அறிமுகம் செய்யும் போது, அதற்கு முந்தைய மாடல்கள் விலை குறைவது வழக்கமான ஒன்று. ஆனால், இந்தாண்டு ஐபோன் 17 மாடலை வாங்கலாம் என்ற ஆசையில் இருந்தவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதாவது, ஐபோன் 17 மாடல்களின் விலையும் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
iPhone 17
256GB – ரூ.99,900
512GB – ரூ.1,24,900
iPhone 17E
256GB – ரூ.79,900
512GB – ரூ.1,04,900
விலை உயர்வு ஏன்?
இந்தியா ஆப்பிள் நிறுவனத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகும். உலகளவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், பிற நாடுகளைக் காட்டிலும், உற்பத்தி செய்யப்படும் இந்தியாவில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது ஏன்? என்று இந்திய பயனாளிகள் புலம்பி வருகின்றனர்.
ஐபோன்களின் விலை பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தான் சுமார் 50 ஆயிரம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதாவது, இறக்குமதி வரி போன்ற வரி விதிப்புகள் முக்கிய காரணமாகும். அதுமட்டுமில்லாமல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றங்களும் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
புது அறிமுகங்கள்
அதுமட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 மூலம் புதுப்பித்துள்ளதுடன், புதிய அறிமுகமாக வயர்லெஸ் இயர்பட்ஸாக ஏர்பாட்ஸ் 5-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானியனின் கேள்வி
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது, அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை, இந்திய சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் டியோவின் ஆரம்ப விலை ரூ.3 லட்சத்தை எட்டியுள்ளது. அதேபோல, இதன் டாப் என்ட் மாடல் நான்கரை லட்சத்தை தொட்டுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து செல்போனை வாங்குவதை விட, நான்கரை லட்சத்தில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டியாகோ காரை வாங்கி விட்டு செல்லலாம் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
வழக்கமாக, ஐபோன் புதிய மாடல்கள் அறிமுகமாகும் போது, ஆப்பிள் நிறுவனத்தை பயனாளிகள் பாராட்டி வருவதுண்டு. ஆனால், இந்தாண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
சரி, அது இருக்கட்டும், நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடைசியாக பயன்படுத்திய ஐபோன் மாடல் என்ன? எத்தனை ரூபாய்க்கு வாங்கினீர்கள். இப்போதைய ஐபோன் 18ன் விலை குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.





