கோவை : கோவை டாடாபாத் லாட்ஜ் அறையில் ராணுவ வீரர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா கமுதுகுடியைச் சேர்ந்தவர் விஜயபூபதி (36). ராணுவ வீரரான இவர், கோவை டாடாபாத் 7-வது வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் அறை எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த 7-ம் தேதி இரவு, அறையில் இருந்த விஜயபூபதி, லாட்ஜ் ஊழியர் லட்சுமணனிடம் இரவு உணவு மற்றும் 3 மது பாட்டில்களை வாங்கி வருமாறு கேட்டுள்ளார். அதன்படி அவற்றை வாங்கிக் கொடுத்த பின்னர், விஜயபூபதி அறையை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாக அறை திறக்கப்படாமல் இருந்ததுடன், அறைக்குள் இருந்து துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர், மாற்றுச் சாவியை பயன்படுத்தி அறையை திறந்து பார்த்தார்.
அப்போது விஜயபூபதி அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து லாட்ஜ் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விஜயபூபதி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா என்பது பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.





