கோவை: கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு குடும்பத்தினருடன் வந்தவர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அந்த நிலையில் முன்னதாகவே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் கண்டிப்பாக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் அல்லது அதிகாரிகளை இங்கே வர செய்யுங்கள் என தெரிவித்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து நான்கைந்து பேர் மட்டும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.





