கோவை: பார்ட்டி ஃபண்டு விவகாரத்தில் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள் திமுகவில் இணைந்து விட்டார்கள் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கோவை மாவட்ட அலுவலகமான காமராஜ் பவனில் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் மற்றும் மூத்த நிர்வாகி பல்லம் ராஜு ஆகியோர் அயோத்தி ராமர் கோவிலில் வருமான கொள்ளை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சீனிவாசன், ராமஜென்ம பூமி, ராமரை கூறி தான் பாஜக ஆட்சியை பிடித்தார்கள் அவர்கள் கோவில் சொத்துக்களிலே கை வைப்பார்கள் என நினைக்கவில்லை என்றார். தற்போது அந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்கள் மாநில காவல்துறையினரே ஒப்பு கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
அந்த கோவில் கட்டுமானம் கோவில் நிர்வாகத்தில் பிரதமருக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் நெருங்கியவர்கள் இருப்பதாக குறிபிட்ட அவர் அக்கோவிலுக்காக பிரதமர் புகழ் ஏற்று கொண்டால் தற்பொழுது கோவிலில் பணம் இல்லை என்றால் பிரதமர் பேச வேண்டுமா பேசக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
அந்தக் கோவிலுக்காக பல்வேறு வீடுகளில் கற்கள் வாங்கப்பட்டதாகவும் கோவையிலும் கற்கள் வாங்கப்பட்டதாக தெரிவித்த அவர் அதனை அதிக விலைக்கு வாங்கியதாக வடநாடுகளில் பலரும் தெரிவித்து வருகின்றனர். RTI யில் இதுகுறித்து கேட்டால் இது தனியார் டிரஸ்ட் என்பதால் எதுவும் கூற முடியாது என்று பதில் அளிக்கிறார்கள். 6000 கோடி ரூபாய் வரை இந்த கோவில்களுக்காக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கான கணக்குகளுக்கு இந்திய மக்களுக்கு யார் பதிலளிப்பது? பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் வாகன ஓட்டுநர் தூய்மை பணியாளர் தான் காரணம் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றார்.
வழக்கமாக கோவில்களில் பணங்களை எண்ணும் எந்த ஒரு நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படவில்லை SBI வங்கி தான் அந்த பணத்தை கலெக்ட் செய்ய வேண்டும் ஆனால் அவர்கள் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளாமல் ஆட்களை வைத்து வங்கிகளுக்கு எடுத்து வருமாறு ஏன் கூறினார்கள் அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, அண்ணாமலை, நாயனார் நாகேந்திரன் ஆகியோர் எல்லாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? என கேள்வி எழுப்பினார்.
தனியார் டிரெஸ்டிடம் நமது கோவில்களை ஒப்படைத்தால் பாஜக நான்கு நாளில் வளர்ந்து விடும் என்றும் கோவிலில் வரக்கூடிய வருமானங்களை எல்லாம் கையாடி குதிரை பேரத்திற்கு அவர்கள் பயன்படுத்துவார்கள் என்று விமர்சித்தார். பாஜகவில் இருந்து ஒருவர் கூட பாஜக மற்றும் பாஜகவின் ஆதரவாளர்கள் அனைவரும் கோவில்கள் ஆன்மீகம் என்ற பெயரில் உங்களிடம் இருந்து பணத்தை பெற்று அரசியல்வாதிகள் ஆக வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள் என்றும் கோவையில் இருந்து துணை ஜனாதிபதி ஆகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் அவரும் இதைப்பற்றி பேச மாட்டாரா? தமிழகத்தில் உள்ள ஆன்மீகவாதிகள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ராமர் கோவில் மட்டுமல்லாமல் அனைத்து கோவில்களிலும் கொள்ளை அடித்தால் சரி என அவர்கள் நினைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக எதிரியாக இருந்தவர்கள் ஏன் அயோத்திய விவகாரத்தில் பேசாமல் இருக்கிறார்கள் என்று திமுகவை பெயர் குறிப்பிடாமல் சாடினார். பொருளாதார நிபுணராக பார்ட்டி பண்டு குறித்தான கேள்விக்கு தற்பொழுது மட்டும்தான் இந்த பார்ட்டி பண்டு என்பது இருக்கிறதா அப்படி என்றால் ஜெயலலிதா செய்தது என்ன? பார்ட்டி பண்டு இல்லாமல் இருந்த கடைசி ஆட்சி காமராஜரின் காங்கிரஸ் ஆட்சி என்று தெரிவித்தார். தற்பொழுது இது குறித்து பேசினால் ஒரு அமைச்சர் சிங்கப்பூரில் சென்று படுத்துக்கொண்டார் மற்றொருவர் பெயில் வாங்கிவிட்டார் என்று கூறிய அவர் கை சுத்தமாக இருந்தால் விசாரணைக்கு வர வேண்டியதுதானே என்றார்.
அதிமுக கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த நபர்கள் குறித்து பேசிய அவர் ஆட்சி மாறினாலும் பார்ட்டி பண்டு மாறவில்லை என்றும் ஜெயலலிதாவிடம் ட்ரெயினிங் பெற்றுக் கொண்டுதான் திமுக விற்கு வந்தார்கள் என்றும் தெரிவித்தார்.
பார்ட்டி பண்டு தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவை உச்சநீதிமன்றமே குற்றவாளி என்று கூறியதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் துரோகிகள் இல்லை என்றும் திமுகவின் தங்களை அவ்வாறு கூறினால் கூறிக் கொள்ளட்டும் என்று தெரிவித்த அவர் இங்கு மினிஸ்டர் ஜெயித்தது இஸ்லாமியர்களின் வாக்குகளால் தான், ஆனால் பாபர் மசூதி இடிக்கப்படும் பொழுது முரசொலி மாறன் எங்கு இருந்தார்?, அவர் செய்தது துரோகமா அல்லது நாங்கள் செய்தது துரோகமா? கலைஞர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது துரோகமா அல்லது நாங்கள் துரோகிகளா? என்றார்.
தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சி தேவைப்பட்டது மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பின்வழியாக ஆட்சியை பிடிக்க நினைத்தார் கவர்னர் விஜயை அழைக்கவில்லை அப்படியான சூழலில் தமிழக மக்களின் தீர்ப்பை காப்பாற்றுவதற்காக ராகுல் காந்தி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவது என்று ஒரு முடிவை எடுக்கிறார் என்றும் இது நடக்கவில்லை என்றால் அதிமுக எப்படி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தற்பொழுது மோசமான நிலைக்குச் சென்றதோ அது போன்று ஆகியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார். அதிமுகவும் திமுகவும் ஜென்ம எதிரிகளாக இருக்கும் பொழுது கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று பேசியது நாங்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய் பாஜகவை கொள்கை எதிரியென்று குறிப்பிட்டு இருக்கிறார் தற்பொழுது வரை பாஜகவுடன் இணக்கமாக எந்த ஒரு முடிவுகளையும் எடுக்கவில்லை, அதே சமயம் மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டா தான் தமிழ்நாட்டிற்கு தேவையானவை கிடைக்கும் என்றதாக தெரிவித்தார். ரபேல் வாட்ச் ஆகியவற்றையெல்லாம் பற்றி கேள்வி எழுப்பிய திமுக அயோத்தியை பற்றி கேள்வி எழுப்பி இருக்க வேண்டுமா இல்லையா? என்றார்.
தற்போதும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறித்தான கேள்விக்கு, லஞ்சம் குறைந்திருக்கிறது குற்ற சம்பவங்களை குறைப்பதற்கு நேரம் வழங்க வேண்டும் இப்பொழுது தான் சிங்கப்பெண் அதிரடிப்படை போடப்பட்டிருக்கிறது. குற்ற சம்பவங்களில் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தியாளர்கள் நீங்கள் தான் கூறுகிறீர்கள் ஆனால் மக்கள் யாரும் அவ்வாறு கூறவில்லை என்றார்.
மேலும் செய்தியாளர்கள் நீங்கள் இன்ஸ்டாகிராம் பாருங்கள் என்றும் தெரிவித்தார். குற்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்று கூறவில்லை காவல்துறையினரை அதிகம் நியமித்தாலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்காது என்றும் கூறவில்லை ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தை போன்று தற்பொழுது நடைபெறவில்லை குற்றச்சம்பவங்கள் கண்டிப்பாக குறைந்து விட்டது என்று தெரிவித்தார்.





