கோவை: அம்மா உணவகம் மாநகராட்சி பூங்கா உள்ளிட்டவற்றை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திலுள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையம், அம்மா உணவகம், மாநகராட்சி பூங்கா மற்றும் மாநகராட்சி பள்ளியில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் தொடர்பாகவும், தாய்மார்கள் பாலூட்டும் அறையினை மேயர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மேயர் சிங்காநல்லூர், பிருந்தாவன் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டுகழிப்பறை வசதி, உடற்பயிற்சிக் கூடம், தண்ணீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், ஐயர் லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை பார்வையிட்ட,மாண்புமிகு மேயர் அவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் காலை உணவுத்திட்டம் குறித்து மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அங்கு மாணவ மாணவியர்கள் பயன்படுத்தும் கணினி அறை, டிஜிட்டல் வகுப்பறை மற்றும் கூடுதல் திறன் மேம்பாட்டு மையத்தினை (ARVR Lab) ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.





