கோவை: கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கமாண்டன்ட் செந்தில்குமார், வருமானத்தை விட 126% அதிகமாக ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் கமாண்டன்டாக பணியாற்றி வந்த செந்தில்குமார் (55), பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஜூலை 9-ஆம் தேதி அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
விசாரணையில், 2022 அக்டோபர் முதல் 2025 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது பெயர், மனைவி சுதாமதி மற்றும் உறவினர்களின் பெயர்களில் வீடு, வீட்டுமனைகள், சொகுசு வாகனங்கள், தங்க நகைகள் மற்றும் வங்கி முதலீடுகள் என பெருமளவு சொத்துகள் குவித்திருப்பது கண்டறியப்பட்டது.
அவரது சட்டபூர்வ வருமானம் மற்றும் செலவினங்களை ஆய்வு செய்ததில், ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகள் முறையான வருமான ஆதாரமின்றி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது அவரது வருமானத்தை விட 126 சதவீதம் அதிகம் என்பதும் உறுதி செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





