கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் இரும்பு சாரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு த*கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெரியூர் வட்டம், தொட்டியபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (63) கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பணியில் இருந்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கட்டிடத்திற்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரத்தில் ஏறுவதை ஜெயராமன் கவனித்தார்.
அவரை நோக்கி, “இந்த நேரத்தில் ஏன் மேலே ஏறுகிறீர்கள்?” என்று கேட்டபோது, அந்த நபர், “சும்மா விளையாடிக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஜெயராமன் சிறிது நேரம் அங்கிருந்து சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்தபோது பலத்த சத்தம் கேட்டதால் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, சற்று முன்பு பேசிக்கொண்டிருந்த அதே நபர், தான் அணிந்திருந்த துணியால் இரும்பு சாரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





