கோவை: மதுவிலக்கு காவலர்கள் லஞ்சம் வாங்கியதாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கோவில்பாளையம் மதுவிலக்கு காவலர்கள் லஞ்சம் வாங்கியதாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரம் கோவில்பாளையம் மதுவிலக்கு காவல்துறையை சேர்ந்த காவலர்கள் பெரியநாயக்கன்பாளையம் வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று நீரா பானம் மற்றும் கள் இறக்கி விற்பனை செய்ய வேண்டுமென்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
ஒவ்வொரு விவசாயிகளிடமும் இருந்து 2500 ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அந்த பணத்தை மீட்டு மீண்டும் விவசாயிகளுக்கே தருவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கள் இறக்குவதற்கு அனுமதி கேட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருவதாகவும் தற்பொழுது பொறுப்பேற்றுள்ள புதிய அரசிடமும் இது குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் உடனடியாக கள் இறக்குவதற்கான அனுமதியை மாநில அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
கள் இறக்குவதற்கு பிற மாநிலங்களில் அனுமதி இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி இல்லை அதற்கு காரணம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் தான் என்று குறிப்பிட்டார் அவர்கள் விவசாயிகள் ஏதோ வாழ்வாதாரத்திற்காக நீரா பானம், கள் இறக்கி வருவதாகவும் சில விவசாயிகள் தெலுவு, வெல்லம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாகவும் ஆனால் காவல்துறையினர் இவ்வாறு அடிக்கடி தோட்டங்களுக்கே சென்று விவசாயிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதால் அங்கு பணிபுரியக்கூடிய பணியாளர்கள் அச்ச நிலைக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தே விற்பனை செய்யப்படுவதாகவும் ஆனால் கள் உடலுக்கு நல்லது என்று குறிப்பிட்டனர்.





