கோவை: ATM இயந்திரத்தில் தவறுதலாக வந்த பணத்தை திரும்பி பெறுவதற்கு வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வாலிபர் முடிவெடுத்து வருகை புரிந்தார்.
கோவையில் ATM இயந்திரத்தில் தவறுதலாக வந்த 10,000 ரூபாய் பணத்தை வங்கியிடம் ஒப்படைக்க முயன்றும் வங்கி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அந்த பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வருகை புரிந்தார்.
கோவையை சேர்ந்த இம்ரான் என்பவர் காந்திபுரம் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 28ம் தேதி , காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகிலுள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது, பரிவர்த்தனை தோல்வி அடைந்ததாக ரசீது வந்துள்ளது. அவரது வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் எதுவும் எடுக்கப்படவில்லை.
ஆனால், ATM
இயந்திரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக 10,000 ரூபாய் வெளிவந்துள்ளது. அது வேறு நபருக்குச் சொந்தமான பணம் என்பதை உணர்ந்த அவர், அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு
அந்தப் பணத்தைச் சேர்ப்பதற்காக வாடிக்கையாளர் சேவை மைய எண்களை தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்பதால், மறுநாள் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு நேரில் சென்று பணத்தை ஒப்படைக்க முயன்றபோது, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புகைக் கடிதம் வழங்க வங்கி அதிகாரிகள் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு இருந்த அலுவலர்களும் மனம் நோகும்படி பேசியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் வங்கி அலுவலர்கள், தயாரித்துக் கொடுத்த வரைவு கடிதத்தில் வங்கியின் பெயர் பிழையாக அச்சிடப்பட்டிருந்துள்ளது. இவ்வாறு வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த அவர், எதிர்காலத்தில் ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் அவர் பணத்தை வங்கியிடம் ஒப்படைக்காமல் திரும்பியுள்ளார்.
பின்னர் கடந்த ஒரு வார காலமாக வங்கி நிர்வாகம் தரப்பில் முறையான ஒப்புகைக் கடிதம் தராமல் இருந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு முடிவெடுத்து என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். வங்கி நிர்வாகமே இது போன்ற அலட்சியமாக செயல்பட்டால் பொதுமக்களின் பணம்தான் வீணாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





