கோவை: கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி. கட்டபொம்மன் வீதி, சத்தி சாலை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்படும் இடத்தினையும், கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கொடிசியா சாலையில், 800 மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கவேண்டி உள்ளதால், போக்குவரத்து நெறிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துத்துறையின் மூலம் மாற்றுப் பாதையை அமைத்து,பணியினை விரைவாக மேற்கொள்வது தொடர்பாகவும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், கிழக்கு மண்டலம், வார்டு எண்.24-க்குட்பட்ட டைட்டல் பார்க் சாலை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்படவுள்ள இடத்தினையும், கள்ளிமடை வசந்தம் நகர் பகுதியில், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பம்புகள் பொருத்தும், பணிகளை விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அவினாசி சாலை, கொடிசியா ஜி.வி.ரெசிடென்சி எதிர்புறத்திலிருந்து சுமார் 300 மீட்டர் நீளத்திற்கும், பன்மால் சந்திப்பு மற்றும் நவஇந்தியா ஆகிய பகுதிகளில் குழாய்கள் அமைக்க வரைபடங்களை தயாரிக்க மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, துணை மாநகரப் பொறியாளர் எழில்(பொ), உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.இளங்கோவன்(பொ) மாமன்ற உறுப்பினர் திருபூபதி, மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் ரவிக்கண்ணன், ஃபர்மான் அலி, சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.





