கோவை: பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பேருந்தின் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.
அப்போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்துத் தொல்லை அளித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போத்தனூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார், அவரை கைது செய்தனர்.





