கோவை: கோவை லூலூ மால் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை இளைஞர் – இளம்பெண் ஜோடி திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை லூலூ மாலில் இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த ஹெல்மெட்டை இளைஞர் – இளம்பெண் ஜோடி திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவை லட்சுமி மில் சந்திப்பு அருகே உள்ள பிரபல லூலூ மாலுக்கு வழக்கம்போல் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். அப்போது மாலின் இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உயர்தர பைக்கில், அதன் உரிமையாளர் விலை உயர்ந்த ஹெல்மெட்டை பூட்டாமல் வைத்துவிட்டு மாலுக்குள் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் பார்க்கிங் பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் மற்றும் அவருடன் வந்த இளம்பெண், யாரும் கவனிக்காத தருணத்தை பயன்படுத்தி அந்த பைக்கில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து, எந்த பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து நடந்து சென்றுள்ளனர்.
சில நேரம் கழித்து திரும்பி வந்த பைக் உரிமையாளர், ஹெல்மெட் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மால் பாதுகாப்பு ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
Video
அதில், இளைஞர் மற்றும் இளம்பெண் இணைந்து ஹெல்மெட்டை திருடிச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பாதுகாப்பு அதிகம் இருக்கும் என நம்பி வாகனங்களை மால்களில் நிறுத்தும் நிலையில், பார்க்கிங் பகுதிகளில் கூட இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது கவலைக்குரியது” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், வாகனங்களை நிறுத்தும் போது ஹெல்மெட் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.




