கோவை: கோவை வடவள்ளி அருகே பக்கத்து வீட்டிற்கு வந்த பெண், மேஜையில் கழற்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 பவுன் தங்கச் செயினை திருட முயன்றதாக போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் முரளி (54). இவரது மாமியார் வீடு அதே பகுதியில் உள்ள மகாராணி அவென்யூ, எம்.ஜி.ஆர். தெருவில் அமைந்துள்ளது.
முரளியின் மாமியார் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் தேவிகா (40). இவர் முரளியின் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி தேவிகா வழக்கம்போல் முரளியின் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மேஜை மீது கழற்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 பவுன் தங்கச் செயினை தேவிகா திருட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த முரளி, தேவிகாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தேவிகா அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முரளி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவிகாவை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேவிகா, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





