கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக காரின் கதவு மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை – இரும்பறை சாலையில் தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசித்து வருபவர் வேலுமணி (38). இவரது மனைவி சுமதி (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 9 வயதில் முகுந்த் என்ற மகனும் இருந்தனர். இருவரும் பெத்திக்குட்டை அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
வேலுமணி இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வேலுமணி பணிக்குச் சென்றுள்ளார். அவரது மனைவி சுமதி அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர்களது மகளும் பள்ளிக்குச் சென்ற நிலையில், வீட்டில் பாட்டியும் சிறுவன் முகுந்தும் மட்டும் இருந்துள்ளனர்.
பாட்டி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சிறுவன் முகுந்த் விளையாடச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவு தானாக மூடிக்கொண்டுள்ளது.
பாட்டி தூங்கிக் கொண்டிருந்ததால், சிறுவன் காருக்குள் சிக்கியிருப்பது உடனடியாக தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுமதி, காருக்குள் முகுந்த் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு, சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து முகுந்தை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காருக்குள் விளையாடிய சிறுவன் எதிர்பாராதவிதமாக கதவு மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





