கோவை: கோவை அருகே தண்டவாளத்தில் குப்பைகளை அகற்றும்போது ரயில் மோதியதில், பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கோவை பீளமேடு – வடகோவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஆவாரம்பாளையம் கொறத்தோட்டம் தண்டவாளப் பகுதியில், ஒப்பந்த அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் சிலர் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளை முடிந்து தொழிலாளர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினர்.
அப்போது, அங்கிருந்த இரு பெண் தொழிலாளர்கள் தண்டவாளத்தைக் கடந்து வேலைக்குச் செல்ல முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, சென்னையில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த ரயிலைக் கவனிக்காமல் அவர்கள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக வந்த ரயில், அவர்கள் மீது பலமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இரு பெண்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோவை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு எம் பாலாடா கல்லக்கொரை பகுதியைச் சேர்ந்த கவிதா (42) மற்றும் கோவை கணேஷ் நகர் என்.என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த யசோதா (24) என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதிய உணவுக்குப் பின் பணிக்குச் சென்ற பெண் தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





