கோவை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் 5வது வெள்ளிக்கிழமையான இன்று, ஆடிப்பூரமும் சேர்ந்து வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் தவறாமல் 11 பொருட்களை வாங்கி வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். அதுபற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்.
ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து போகும் என்பது ஐதீகமாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில், கோவில்கள் மற்றும் வீடுகளில் அம்மனை பல்வேறு அலங்காரங்களில் அலங்கரித்து வழிபடுவது உண்டு.

ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்பான நாட்கள் இருந்தாலும், ஆடி வெள்ளிக்கு மட்டும் எப்போதுமே தனிச்சிறப்புகள் உண்டு. இந்த நாட்களில் விரதமிருந்து, அம்மனுக்கான மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பயன்கள் ஏராளம்.
ஆடி வெள்ளி
கடக மாதத்தில் சூரிய பகவான் பயணிக்கும் மாதம் தான் ஆடி மாதமாகும். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் சுகபோக வாழ்க்கைக்கும், செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமாக சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். ஆடி மாதத்தில் சந்திரனும், சுக்கிரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை இருக்கும். இந்த சமயத்தில் பெண் தெய்வங்களின் சக்தி அபரிவிதமாக காணப்படும். இதன் காரணமாகவே ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.
ஆடி மாதத்தில் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாட்களாகும். குறிப்பாக, ஆடி வெள்ளி பெண்களுக்கு முக்கியமான நாளாகும். ஆடி மாதத்தில் வரும் 5 வெள்ளிக்கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 5 வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருக்க முடியாத பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம்.
விரத பலன்கள்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணம் தடையுள்ள பெண்கள் ஆடி வெள்ளிகளில் விரதம் இருக்கலாம். அதேபோல, நிம்மதியை தேடுபவர்கள், குடும்பத்தில் தீராத பிரச்சினை இருப்பவர்கள், செல்வம் தங்குவதற்கு, தீராத கடன் பிரச்சினை, அகலாத நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருந்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். ஏனெனில், கேட்ட வரத்தை கொடுக்கும் மகிமை ஆடி வெள்ளிக்கு உண்டு.
விரதம் இருப்பது எப்படி?

சூரியன் உதயமாவதற்கு முன்பே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். பின்னர், கோவிலுக்கு சென்று வேண்டுதலை வேண்டிக்கொண்டே விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலேயே மகாலட்சுமியின் படத்தை வைத்து, அதன் முன் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அம்மன் படம் ஏதுமில்லையென்றால், தீபத்தையே அம்மனாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, காலையும், மதியமும் விரதம் இருந்தால் நல்ல பலனை அளிக்கும். முடியாதவர்கள், காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.
மந்திரங்கள்
லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,சகலகலாவல்லி மாலை, லட்சுமி அஷ்டோத்திரம்,செளந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபடலாம். பூக்களால் அர்ச்சனை செய்வதைவிட, இந்த மந்திரங்களாலும், ஸ்தோத்திரங்களாலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆடிப்பூரம்
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் கூடும் இந்த நல்ல நாளில் கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்வுதான் ஆடிப்பூரம். அம்பாளுக்கு மிகவும் உகந்த பண்டிகையாகும். பார்வதி தேவி அவதரித்த தினமாகவும், ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரமாகவும் போற்றப்படுகிறது. இந்த நாளில் அம்மன் கோவில்களில் வளையல் காப்பு வைபவம் நடப்பது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். திருமணம் வரம் மற்றும் குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் இந்த வளையல் காப்பு வைபவத்தில் பங்கேற்கலாம். அதுமட்டுமில்லாமல், சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும்.
கோவில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், அம்பிகையை நினைத்து வீடுகளில் விளக்கேற்றி, இறைபாடல்களை பாடி வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ஆடிப்பூரத்தன்று 11 பொருட்களை வாங்குவதோ, 11 விளக்குகளை ஏற்றுவதோ மிகவும் நல்லது. இதன்மூலம், குடும்பத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி, அணுகூலம் கிடைக்கும். அதேபோல, கணவன், மனைவி இடையே ஏற்பட்டு வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
வாங்க வேண்டிய 11 மங்களப் பொருட்கள்; கல் உப்பு, விரலி மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலை பாக்கு, புஷ்பம், தேங்காய், மஞ்சள் கயிறு, வளையல், மருதாணி கோன், சிவப்பு ஆடை.
நமது வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோவிலில் உள்ள ஆண்டாள் கடவுளுக்கு சிவப்பு நிற ஆடை வழங்கி, வேண்டிக் கொண்டால், நினைத்தது பழிக்கும் என்பது ஐதீகம்.
ஆடி கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் என்பதால் புட்டு செய்து படைப்பது மிகவும் நல்லது. அது முடியாவிட்டால், அரிசி, வெல்லம் சேர்க்கலாம். அதாவது அரிசியை வேக வைத்து பாயசமாகவோ அல்லது சர்க்கரை பொங்கலாகவோ வைக்கலாம்.




