கோவை: மேகதாதுவில் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பேரவைத் தலைவரும், முதலமைச்சரும் விரும்புவது போல தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக சட்டசபையில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பேச வேண்டும் என்றார்.
வார்த்தை ஜாலங்களால் வரும் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் 234 எம்.எல்.ஏ.க்களும் மக்கள் பணிகளைத் தொய்வின்றி செய்ய கார், டிரைவர் மற்றும் உதவியாளர் மிக அவசியம். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கே வாகனங்கள் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு இது தேவையான ஒன்று என்றும் ஆந்திராவிலும் இத்தகைய நடைமுறை உள்ளது என்றார். தங்கள் ஆட்சியில் செய்ய முடியாத விரக்தியில்தான் எதிர்க்கட்சியினர் இதை விமர்சிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
பல்வேறு நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் மக்கள் பணிக்காகவே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மிக உறுதியாக உள்ளது. அங்கு ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு. டெல்டா பாசன நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடமும் முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிலைப்பாட்டை மீறி அவர்களால் நிச்சயம் அணை கட்ட முடியாது என்றும்
வறட்சி நிவாரணத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் மாத இறுதிக்குப் பிறகு மழையின் அளவு, பயிர் சேதம் மற்றும் நிலத்தின் ஈரப்பதம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நிதி விடுவிக்கப்படும் என்றார்.
தேனி மாவட்ட வட்டாட்சியர் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியிட்ட தகவல் கிடைத்த உடனேயே, இரவோடு இரவாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த சுற்றறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது. அரசு விதிகளின்படி அவர் மீது துறைரீதியான மேல்நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் என கூறினார்.





