கோவை : ராகுல் காந்தி பிரதமரானால் இந்தியாவில் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பியதன் விளைவாகவே, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்கும் நிலை உருவானதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் ராகுல் காந்தி மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தெளிவான நிலைப்பாடு தமிழகத்தில் நீட் தேர்வு வரக்கூடாது என்பதுதான் என்றும், இதனை 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அன்றைய மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்திருந்தால் அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது எனக் குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற கட்சிகளை உடைத்து ஜனநாயகத்தைச் சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தொடர்பாக அக்கட்சியினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே உள்ளதாகவும் விமர்சித்தார்.
மேகதாது விவகாரத்தில் தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளதாகவும், அங்கு ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்றும் கூறினார்.
இந்தியாவில் அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமில்லாத ஒன்று எனத் தெரிவித்த அவர், இயற்கையின் ஓட்டத்தை மாற்றாமல், கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெறுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் நிலையான கொள்கைகள் பின்பற்றப்படுவதால் தொழில் முதலீடுகளுக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், இதன் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.





