கோவை: கோவையில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 50 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர் ஒப்பணக்கார வீதியில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து, சுமார் 50 கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒப்பனக்கார வீதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஆடிட்டர் சேஷகிரி. இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகனை வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கிவிட்டு, மீண்டும் கோவை வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். பதறியபடி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ எடையிலான வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து, வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒப்பனக்கார வீதியில், வீட்டின் பூட்டை உடைத்து 50 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





