கோவை: பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு தேவையான சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜய் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு பஞ்சாலை கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனையகத்தில், தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தற்போது நமக்கு தேவையான பருத்தியில் சுமார் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள பருத்தியை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழகத்திற்கு தேவையான அளவு பருத்தியை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு தேவையான சலுகைகள் மற்றும் ஆதரவுகளை வழங்கி, உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார்.
இதற்காக ஒவ்வொரு பகுதியாக ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய தயாராக உள்ளனரா, எந்தெந்த பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வுகளின் அடிப்படையில், தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை கூடிய விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி உறுதியளித்தார்.





