கோவை: 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை
விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது, 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய 5 பிரிவுகளில், செப்டம்பர் 09 முதல் அக்டோபர் 04 வரை நடைபெறவுள்ளன.
காவல்துறை சார்பில், போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் நாட்களிலும் இடையூறு இன்றி நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாநகராட்சித் துறையின் சார்பில், போட்டிகள் நடைபெறும் இடங்களை சுத்தம் செய்து விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். குப்பைத்தொட்டிகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைத்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்பில், தனித்தனியாக மருத்துவ வசதியுடன் கூடிய மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு நியமிக்கப்படும் மருத்துவக்குழுவினரின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் பட்டியலை உரியவர்களிடம் வழங்க வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் நாள் விவரத்தை பள்ளிகளுக்கு தெரிவித்தல், கலந்து கொள்ளும் மாணவ மாணவியருக்கு ஆளறி சான்றிதழ் வழங்குதல், வங்கி கணக்கு இல்லாதோருக்கு உடனடியாக வங்கி கணக்கு துவங்குதல் உள்ளிட்ட ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான போட்டி விவரத்தை பள்ளிகள் மற்றும் மையங்களுக்கு தெரிவித்தல் உள்ளிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டு சங்கங்கள் போட்டி நடைபெறும் விளையாட்டிற்கான தகுதி விதிமுறைகள் போட்டி விதிகள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து போட்டிகளுக்குத் தேவையான தகுதியான நடுவர்கள், பரிந்துரை செய்து, போட்டிகள் விதிமுறைகளின்படி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டு, விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.





