கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி 72 வயது முதியவரிடம் ரூ.5.50 கோடி மோசடி!

கோவை : டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி கோவை தொழிலதிபரிடம் ரூ.5.50 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் மேலும் ரூ.3 கோடியை பறிக்க முயன்ற நிலையில், வங்கி அதிகாரிகளின் சந்தேகம் மற்றும் சைபர் கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையால் அந்த பணம் தப்பியது.

Advertisement

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் தொழிலதிபராக உள்ளார். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

தன்னை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திய அந்த நபர், முதியவரிடம் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதனுடன் நிற்காமல், போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி முதியவரை தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், வெளியே சென்றால் வீட்டின் அருகே போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும், அவர்கள் உடனடியாக கைது செய்துவிடுவார்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.

Advertisement

மேலும், தான் டிஜிட்டல் அரஸ்ட்டில் இருப்பது குறித்து தனது மனைவியிடம்கூட தெரிவிக்கக்கூடாது என மர்ம நபர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த முதியவர், வீட்டில் இருந்தபடியே மர்ம நபர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வந்துள்ளார்.

தொடர்ந்து மர்ம நபர்கள், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வையுங்கள். பணத்தை ஆய்வு செய்த பிறகு மீண்டும் உங்களது கணக்கிற்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

மர்ம நபர்களின் பேச்சை உண்மை என நம்பிய முதியவர், தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை அவர்கள் கூறிய கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.5 கோடியே 50 லட்சம் பணத்தை அவர் மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

ரூ.5.50 கோடி பணம் கைமாறிய பிறகும் மர்ம நபர்கள் அவரை விடவில்லை. மாறாக, அவரது வைப்பு கணக்கில் மேலும் ரூ.3 கோடி இருப்பதை அறிந்து, அந்த பணத்தையும் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய முதியவர், தனது வைப்பு கணக்கில் இருந்த ரூ.3 கோடி பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முதியவரிடம் பணத்தை எதற்காக எடுக்கிறார் என வங்கி அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஆனால், அவரால் பணம் எடுப்பதற்கான காரணத்தை சரியாக தெரிவிக்க முடியவில்லை. முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் வங்கி அதிகாரிகளின் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக ரூ.3 கோடி பணத்தை வழங்காமல், மறுநாள் வருமாறு கூறி முதியவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கும் வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட முதியவரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் முதியவர் தனது சொந்த தேவைக்காக பணத்தை எடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது செல்போன் மற்றும் மோசடி தொடர்பாக பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது தான் அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸ் அதிகாரிகள் என கூறிய மர்ம நபர்கள், டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி, முதியவரிடம் இருந்து ரூ.5.50 கோடி பணத்தை ஏற்கனவே மோசடி செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, முதியவரிடம் டிஜிட்டல் அரஸ்ட் என்பது உண்மையான சட்ட நடைமுறை கிடையாது என்றும், சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை அச்சுறுத்தி பணத்தை பறிப்பதற்காக பயன்படுத்தும் மோசடி முறையாகும் என்றும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால், ஆரம்பத்தில் போலீசாரின் விளக்கத்தை முதியவர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் தன்னை உண்மையாகவே போலீசார் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் கூறுவது விசாரணையின் ஒரு பகுதிதான் என்றும் அவர் நம்பியுள்ளார்.

இதையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசாரும் முதியவரிடம் விரிவாக பேசி, டிஜிட்டல் அரஸ்ட் மோசடி குறித்து எடுத்துக்கூறினர். மர்ம நபர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி, பயமுறுத்தி பணத்தை பறித்திருப்பதை போலீசார் தெளிவுபடுத்திய பின்னரே முதியவர் உண்மையை புரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வங்கி அதிகாரிகள் சரியான நேரத்தில் சந்தேகம் அடைந்து சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், முதியவர் மேலும் ரூ.3 கோடி பணத்தை இழப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ரூ.8.50 கோடி வரை பணத்தை பறிக்க மர்ம நபர்கள் முயன்ற நிலையில், ஏற்கனவே ரூ.5.50 கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதும், மேலும் ரூ.3 கோடி பணத்தை அனுப்பும் முன்பே போலீசாரின் தலையீட்டால் அது தடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் யார், பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது, இந்த மோசடிக்கு பின்னால் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி போலீஸ், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் ஒருபோதும் வீடியோ அழைப்பு அல்லது தொலைபேசி மூலம் ஒருவரை ‘டிஜிட்டல் அரஸ்ட்’ செய்வதில்லை. இதுபோன்ற அழைப்புகள் அல்லது மிரட்டல்கள் வந்தால், பயந்து பணத்தை அனுப்பாமல் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...