கோவை: மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் வாயிலாக அரசு மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டிற்கு ரூ.4 கோடியே 30 இலட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 377 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் டிராக்டர், பவர்வீடர், பவர்டில்லர், தட்டு வெட்டும் கருவி. புல் வெட்டும் கருவி சுழற்கலப்பை, கொத்துக் கலப்பை, கைபேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி தென்னை மட்டை உரிக்கும் கருவி) ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பழங்குடியினர் ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியமும், பொதுப்பிரிவை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் களையெடுக்கும் இயந்திரம், நெல் நடவு இயந்திரம் மற்றும் தீவனம் நறுக்கும் கருவி வாங்குவதற்கு கூடுலாக 10 சதவீத மானியமும் வழங்கப்படும்.
செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை மற்றும் 15-ந்தேதி முதல் 21ந்தேதி வரை உழவர் செயலியில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு என்ற தொகுதியில் வேளாண்மை பொறியியல் மானியத் திட்டங்கள் என்ற பிரிவை தேர்வு செய்து, விவசாயி தனது புகைப்படம்சாதிச் சான்றிதழ் (ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவு விவசாயிகள் எனில்), சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், ஆதார் எண்ணுடன் தொடர்புடைய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் டிராக்டர் வாகன பதிவுச் சான்றிதழ் (டிராக்டரால் இயங்கக்கூடிய கருவிகளுக்கு) போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 8ந்தேதி அன்று அம்மாதத்தில் 1ந்தேதி முதல் 7ந்தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் மற்றும் 22-ந்தேதி அன்று அம்மாதத்தில் 15ந்தேதி முதல் 21 ந்தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் வேளாண் இயந்திரம் அல்லது கருவிகளின் இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட குலுக்கல் தேர்வு முறையில் இணையதளத்தின் வாயிலாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டு மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயன் அடைய செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தடாகம் ரோடு, ஜி.சிடிஅஞ்சல், கோயம்புத்தூர் 13 (0422-2964838) உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம் தடாகம் ரோடு, ஜி.சி.டி, அஞ்சல் கோயம்புத்தூர்-13 (0422 2966500 / 87783 70929) மற்றும் உதவி செயற்பொறியாளர் வே.பொ) அலுவலகம்ஒழுங்குமுறை விற்பனை வளாகம், மீன்கரை ரோடு, பொள்ளாச்சி 01 (04269 292271 94435 66451) ஆகிய அலுவலகங்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





