கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,600 சிலைகளால் உருவான ‘ஓம்’ வடிவம் வடிவமைத்தனர் கல்லூரி மாணவிகள்.
விநாயகர் சதுர்த்தி ஒட்டி கல்லூரியில் 1600 விநாயகரை வைத்து ஓம் வடிவில் பிரதிஷ்டை செய்து கல்லூரியில் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் செயல்பட்டு வரும் கதிர் அறிவியல் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கல்லூரி மாணவர்கள் 1,600 பேர் தலா ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, கல்லூரி வளாகத்தில் 1,600 சிலைகளையும் ‘ஓம்’ என்ற ஓங்கார எழுத்து வடிவில் வரிசைப்படுத்தி வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல விநாயகருக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதல் கடவுளான விநாயகரை துதித்து வழிபடுவதன் மூலம் சகலவிதமான நன்மைகளும் கிடைப்பதுடன், மாணவர்களின் கல்விச்செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.
கதிர் கல்வி குழுமத்தின் தலைவர் கதிர் செங்கோட்டையன், செயலாளர் லாவண்யா கதிர், துணைத் தலைவர் மிதிலேஷ், கல்லூரி முதல்வர் கற்பகம் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.





