கோவை : கோவை அவினாசி சாலையில் செப். 12, 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கை, கைவினைப் பொருட்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதுடன், இடைத்தரகர்களைத் தவிர்த்து விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக அவர்களையே சென்றடையும் வகையில் கோவையில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது.
சிவா டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் மலைவாழ் மக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தயாரித்த இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
மலைப்பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக இயற்கையோடும், வனத்தோடும் இணைந்து வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் பல்வேறு இயற்கை சார்ந்த பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை தயாரித்து வருகின்றனர். ஆனால், அவர்களின் தயாரிப்புகளுக்கு உரிய விலையும், நேரடியான சந்தை வாய்ப்பும் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் மற்றும் மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
சிவா டிரஸ்ட் சார்பில் கடந்த 32 ஆண்டுகளாக நெல்லை, தென்காசி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 2,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பெண்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சுயமாக வருமானம் ஈட்டுவதற்கான பல்வேறு தொழிற்பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சிவா டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணிய சிவா கூறியதாவது:
மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நவீன இயந்திரங்கள் மற்றும் இணையதள வசதிகள் போதுமான அளவில் இல்லை. அவர்களின் உற்பத்தியை மேம்படுத்த தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், எதிர்காலத்தில் அவர்களின் தயாரிப்புகளை இணையவழியில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.
அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மலைவாழ் மக்களின் தயாரிப்புகளான சீமார் முதல் பல்வேறு அலங்காரப் பொருட்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டு, நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
மலைப்பகுதிகளில் இணையதள வசதியுடன் கூடிய மையங்களை உருவாக்கி, அங்கிருந்து அவர்களின் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டால், அவர்களின் உழைப்புக்கான நியாயமான வருமானம் நேரடியாக அவர்களிடம் சென்றடையும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.





