கோவை: கோவை விமான நிலையத்தில் நாளை முதல் ‘யாத்ரி சேவா அபியான்’ விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை 24 நாள்களுக்கு ‘யாத்ரி சேவா அபியான்’ சிறப்பு விழிப்புணர்வு மற்றும் சேவை முகாம் நடைபெற உள்ளதாக விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையம், சேவை, ஒத்துழைப்பு, தூய்மை, புன்னகையுடன் கூடிய உபசரிப்பு ஆகிய நான்கு முக்கிய கோட்பாடுகளின் கீழ் செயல்பட்டு வருகிறது.
அத்துடன் பயணிகளின் பாதுகாப்பும் பாதுகாப்பான பயணமும் முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சேவைகளை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 24 நாள்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பு ஆய்வுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நாள்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பயணிகளுக்கான சக்கர நாற்காலி, பிரத்யேக கழிப்பறை, நகர்வு தளங்கள் உள்ளிட்ட வசதிகள் மறுஆய்வு செய்யப்படும். மேலும் புதிய பயணிகள் எளிதில் வழியறியும் தகவல் பலகைகள், புறப்பாடு நுழைவாயில், பாதுகாப்பு சோதனை மற்றும் பயணப் பொதிகள் பரிசோதனை மையங்களில் காலதாமதமின்றி பயணிகள் அனுமதிக்கப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்படும்.
விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரம், முதலுதவி மற்றும் மருத்துவ தயார்நிலை, குடிநீர் தரம், டிஜியாத்ரா சேவை மற்றும் இணைய வசதி உள்ளிட்டவையும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். இந்த முகாமின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ‘அதிதி தேவோ பவ’ என்ற கருப்பொருளிலும், அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘சிரமதானம்’ மூலம் சிறப்புத் தூய்மைப் பணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அண்மையில் வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வெளிப்புற கழிப்பறை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சர்வதேச பயணிகள் பகுதியில் பெரிய தொலைக்காட்சித் திரை, முனையத்தின் முதல் தளத்தில் தானியங்கி பழச்சாறு இயந்திரம், மாற்றுப் பாதை கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போதுள்ள உள்நாட்டு பாதுகாப்புப் பகுதி நெரிசலைக் குறைக்க, சுமார் 1,000 சதுர மீட்டர் கூடுதல் பரப்பளவிலான விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் இப்பணிகள் நிறைவடையும்.
தற்போது ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதியுள்ள நிலையில், எதிர்காலத் தேவையை முன்னிட்டு ரூ.2,132 கோடி மதிப்பில் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 1.20 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையக் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளதுடன், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கிய விதிமுறைகளின்படி, விரிவான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இறுதி அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.





